Home மாவட்டங்கள் பெங்களூர் கூவம் அடையாறு ஆறுகளை மாற்றதமிழக அரசு திட்டம்

கூவம் அடையாறு ஆறுகளை மாற்றதமிழக அரசு திட்டம்

சென்னை: ஜூன் 11-
சென்னையின் உயிர்நாடிகளாக விளங்கி வந்த கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய மூன்றையும் பழையபடி மீட்டெடுத்து, அவற்றின் பொலிவை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜயின் கனவுத் திட்டமான இது, தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. நகர்ப்புற மறுசீரமைப்பிற்கான மத்திய அரசின் ‘நகர்ப்புற சவால் நிதி’ (Urban Challenge Fund – UCF) திட்டத்தின்கீழ், தமிழகத்திற்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் கடந்த திங்கட்கிழமை அறிவித்த ‘முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம்’ (CMIUTM – Chief Minister’s Integrated Urban Transformation Mission) மூலம் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்வதும்தான். மாநகராட்சி நிர்வாகம் (MAWS) துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்துப் பேசுகையில், “மத்திய அரசின் யு.சி.எஃப் (UCF) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத்தம் ரூ.30,000 கோடி வரை நிதி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்காக நடப்பாண்டிலிருந்தே சி.எம்.ஐ.யு.டி.எம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.