
போபால்: ஜூன் 11
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜக 2 இடத்திலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் எளிதாக வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.ஆனால் பாஜக பொதுச் செயலாளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். பாஜகவிடம் 48 வாக்குகள் உபரியாக இருப்பதால் 3-வது வேட்பாளராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார்.அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களை நேற்று சந்தித்தனர். அப்போது, “மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய மனுவை ஏற்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்“ என கோரிக்கை மனு அளித்தனர்.


















