Home செய்திகள் தேசிய செய்திகள் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது

திருவனந்தபுரம்: மே 4-
கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டிக்கு தேவையான 71 தொகுதிகளை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி (எல்டிஎஃப்) ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 9 ம் தேதி கேரளாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 79.63 சதவீத வாக்குகள் பதிவாகின. மும்முனை போட்டி கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்று 3 முனை போட்டி நிலவி வருகிறது. விறுவிறு ஓட்டு எண்ணிக்கை இந்நிலையில் தான் தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. காலை 8.15 மணியளவில் தபால் வாக்குகளில் காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது.பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.45 மணியளவில் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியை தொட்டது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளது; மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி காங்கிரஸ் கூட்டணி 71 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதேவேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 63 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் கூட்டணி 88 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் ‘எக்ஸிட் போல்’ எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளன. இதனால் காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதேவேளையில் கருத்து கணிப்புகளை தாண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெல்லும் என்று அந்த கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வென்று ஹாட்ரிக் முறையில் ஆட்சியை பிடிக்க ஆர்வமாக உள்ளது. அதேவேளையில் 10 ஆண்டுக்கு பிறகு எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. அதேவேளையில் கேரளாவில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.