
திருவனந்தபுரம், ஆக. 1- தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை நம்பி இருந்த கேரள ஒப்பந்ததாரர்கள், தற்போது, மணல், செங்கல், ஜல்லி உள்பட பல்வேறு கனிம வளங்கள் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றன. கேரளாவில் நடந்து வரும் ரூ.20 ஆயிரம் கோடி ரயில்வே மேம்பாட்டு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில்புதிதாக குவாரிகளை திறக்க முதல்வர் வி டி சதீசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேராளவிற்கு கனிம வளங்கள் என்பது பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து தான் போக வேண்டியதிருக்கிறது. ஏனெனில் கேரளாவில் நிலச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் பல இடங்களில் குவாரிகள் செயல்பட அனுமதி இல்லை.. முன்னதாக கேரளம் மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டில் இருந்தன. ஆனால் 2023-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கேரளத்தில் செயல்பட்டு வந்த பெரும்பான்மையான குவாரிகள் மூடப்பட்டுவிட்டன, தற்போது கேரளத்தில் 219 குவாரிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதனால் கனிம வளங்களுக்கு தமிழகத்தை தான் கேரளம் அரசு நாடி வந்தது. அதன்படியே கேரளத்தில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள், ரெயில்வே மேம்பாட்டு கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கல், மண் உள்பட கனிம வளங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல இடங்களில் குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல்
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதிக்கும் வகையில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தன. ஆனாலும் எதிர்ப்பை மீறி கேரளாவுக்கு கனிமவளம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில புதிதாக தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு கல், மண் உள்பட கனிம வளங்களை கேரளம் உள்பட அண்டை மாநிலங்களுக்கு 3 மாதங்களுக்கு அனுப்ப தடை விதித்திருக்கிறது. இதனால் கேரளத்தில் சுமார் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.













