Home மாவட்டங்கள் பெங்களூர் கே.பி.எஸ்.சி. முறைகேடு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை – கீதா கைது

கே.பி.எஸ்.சி. முறைகேடு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை – கீதா கைது

பெங்களூரு: அக். 7-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய கால்நடை உதவி மருத்துவர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வழக்கில் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் சிவஷங்கரப்பா சாவுக்கார் மற்றும் உறுப்பினர் கீதா ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். உறுப்பினர் கீதாவிடம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர். அவருக்கு பௌரிங் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கோரமங்களாவில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேவேளையில், முன்னாள் தலைவர் சிவஷங்கரப்பா சாவுக்காரின் சஞ்சய் நகர் டாலர்ஸ் காலனி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். தேர்வாணையத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஞானேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் பசவராஜு ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட ஞானேந்திர குமார், பசவராஜுவிடம் நடத்தப்பட்ட 20 நாள் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தேர்வு நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு சாவுக்கார், கீதா, சாந்தா ஹொசமனி மற்றும் எல்ஃப்ரீடா டிசில்வா ஆகியோர் தங்களை தொடர்புகொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மற்றும் பணம் கொடுக்கத் தயாராக உள்ளவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், சிவஷங்கரப்பா சாவுக்காரின் உறவினரான சுகுரேஷ் ஜாக் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பட்டப்படிப்பில் தோல்வியடைந்த இவர், தேர்வாணையத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கைமாறியதும், அதன்மூலம் தேர்வர்களின் செல்போன் எண்களைப் பெற்று கீதா தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சாவுக்கார் இல்லம் மற்றும் தேர்வாணைய அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தது. தற்போது இரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை நடத்தி, சட்டவிரோத பணப்பரிமாற்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் மற்றும் மீன்வளத்துறை பணியிடங்கள் மட்டுமின்றி, நீர்வளத்துறை, தொழில் விரிவாக்க அதிகாரி என மொத்தம் 13 நியமனங்களில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதும், வினாத்தாள் கசிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விதான் சௌதா காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஒரு பெண் விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு, அதில் 20 முதல் 30 சதவீத தொகை (ரூ.18 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை) முக்கிய குற்றவாளிகளுக்கு கமிஷனாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டதும் அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.