Home மாவட்டங்கள் பெங்களூர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்

சென்னை: ஜூன் 12-
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் விஜய், இன்று (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து தமிழகத்துக்கு புறப்பட இருந்தார். இந்த நிலையில் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கும் விஜய், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் செல்ல உள்ளார். உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்கை கோவில் மிகவும் பிரபலமானதாகும். கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள்
இன்னும் சொல்லப்போனால் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன், முப்பெரும் தேவியரின் வடிவமாக திகழ்கிறார். அதாவது கொல்லூர் மூகாம்பிகை, மகாலட்சுமி (செல்வம்/செல்வாக்கு). மகாசரஸ்வதி (அறிவு/அரசியல் சாணக்கியத்தனம்), மாகாளி (வீரம்/எதிரிகளை வெல்லும் சக்தி) ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாக திகழ்கிறார். மேலும் இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.