
மதுரை: ஜூலை 31-
தாமிரபரணி ஆற்றில், ஆடைகளை வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆனந்த விலாஸ் மண்டபம் உள்ளது. அதைக் கையகப்படுத்த தடை கோரி, பாபநாசம் சிவனு பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றின் படித் துறைகளில் முன்னோருக்குச் சடங்கு செய்யும் போது, தினமும் ஒரு டன்னுக்கு குறையாத அளவு பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத ஆடைகள், துண்டுகள், காலணிகள் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்புடைய பொருட்கள் ஆற்றில் வீசப்படுகின்றன.
தத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. தூய பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் இயற்கையில் மட்கக் கூடியவை. ஆனால், பாலியஸ்டர் துணிகள் மட்குவதில்லை. இந்த ஆடைகளால் ஆற்றுப்படுகையில் பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
நூறு ஆண்டுகள் வரை வாழும் இந்தியக் கருப்பு ஆமை மற்றும் இந்திய ஃப்ளாப்ஷெல் ஆமைகளின் வாழ்விடமாகவும் தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த வகை ஆமைகள், ஆற்றில் வீசப்பட்ட துணிகளில் சிக்கி இறக்கின்றன. ஆற்றில் வீசப்படும் சோப்பு, ஷாம்பு போன்ற ரசாயனங்களின் பயன்பாடு மீன்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்.நீர் நிலைகளை எந்த வகையிலும் மாசுபடுத்துவதை ஏற்க முடியாது. எனினும் இப்பிரச்சினை இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையது. தாமிரபரணி ஆற்றங்கரையில் சடங்குகள் மற்றும் வழிபாடுகளை முறைப்படுத்துவதால் அடிப்படை உரிமைகள் மீறப்படாது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், மக்களின் உரிமைகளை மீறாமல் இருக்கும் நிலையில் பக்தர்கள் ஆன்மிகச் செயல்களை மேற்கொள்ளலாம்.
இந்துக்களால் தாமிரபரணி ஆறு புனிதமானதாகக் கருதப்படுவதையும், அதை வழிபடுவதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி புஷ்கரம் நடைபெறுகிறது.
தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி’யாக உருவகப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆறுகளைத் தெய்வங்களாகக் கருதும் நாம்தான் கழிவுகளையும் உருவாக்குகிறோம். ஆறுகளுக்குத் தீங்கு விளைவிப்பது முன்னோர்கள் காலத்தில் குறைவாக இருந்தது. அது ஆறுகளின் சுய சுத்திகரிப்புத் திறனுக்கு உட்பட்டதாகவே இருந்தது. தற்போது அவ்வாறு இல்லை.













