Home மாவட்டங்கள் பெங்களூர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜூலை 31-
“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50% கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது.
ஆட்சிக்கு வந்தபின் ரூ.75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.
தவெக அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தவெக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் 6.8.2026 அன்று தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
இல்லையெனில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தவெக கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். காவிரி நீரை மாநிலங்களுக்கிடையே பங்கிடுவது பற்றி உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி கர்நாடக அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துள்ளது. ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 டிஎம்சி நீர். ஆனால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை.
காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (ஊறுசுஊ) கூட்டத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அதன்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு விநாடிக்கு 3500 கன அடி வீதம் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்தியுள்ளது.