
ஜம்மு: அக். 3-
ஜம்மு-காஷ்மீரில், செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலத்தின் மீது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சாதனை படைத்தது.
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமாகக் கருதப்படும் செனாப் பாலம், நில அதிர்வு மற்றும் பலத்த காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக இயக்கப்படும் கத்ரா–ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா–பனிஹால் ரயில் பிரிவில் வேகத்தை அதிகரிப்பதற்கான சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு ரயில்வேயின் ஜம்மு கோட்டத்துக்கு உட்பட்ட இந்தப் பிரிவில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செனாப் ஆற்றுப் பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் ரயில்வே பாலமான அஞ்சி பாலத்தையும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது.
இதுகுறித்து வடக்கு கோட்ட ரயில்வேயின் மூத்த வணிக மேலாளர் உச்சித் சிங்கால் கூறியதாவது:
“சோதனையின்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி பாலத்தையும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்தது. இதன் மூலம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா முதல் பனிஹால் வரையிலான பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.














