
சென்னை: செப்.13-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் ஏற்பட்ட 2 ஆயிரம் பேரில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதிவாகும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அடையாறு, அண்ணா நகர், வளசரவாக்கம் மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்த மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் பதிவான டெங்கு பாதிப்பு எண்ணிக்கையையும், கடந்த 10 நாட்களில் பதிவான பாதிப்பு எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது, தற்போதைய நிலவரம் சற்று அதிகமாக உள்ளது.இதனையடுத்து, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கும் விரைவாக பரவக்கூடும். எனவே, வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், மற்றவர்களும் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படியும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் தண்ணீர் தேங்கவிடாமல் சுற்றுப்புற தூய்மையை பேண வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.















