
சென்னை: நவ. 24-
சென்னை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மழையின்றி வறண்டு காணப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக மாநகர், புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் ஒவ்வாமையால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், சளித்தொல்லை போன்றவற்றால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. பின்னர் பிற்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வந்த மழை, இரவில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மழையால் தியாகராயநகர், கிண்டி, அண்ணா சாலை, வேளச்சேரி, அடையாறு, வால்டாக்ஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கடந்த ஒரு வாரமாக சென்னை, புறநகரில் கடும் காற்று மாசு நிலவியது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவான காற்றுத்தரக் குறியீடு 100-ஐ கடந்து 200-க்கு மேல் பதிவானது.













