
சென்னை: செப். 1-
அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரி, மதுரை மீனாட்சி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சுசீந்திரம் தாணுமாலயன், அழகர்கோவில் கள்ளழகர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன், ஈரோடு பண்ணாரி அம்மன், மருதமலை முருகன், ஆனைமலை மாசாணியம்மன், மாங்காடு காமாட்சி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி, பெரியபாளையம் பவானியம்மன், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், சின்ன காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி, சேலம் சுகவனேஸ்வரர், நாமக்கல் நரசிம்மர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், தேக்கம்பட்டி வனபத்ர காளி, பேரூர் பட்டீஸ்வரர் உள்ளிட்ட 52 கோயில்கள் அடங்குகின்றன.
இந்த கோயில்களில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க ‘செல்போன் பாதுகாப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி கோயிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாக காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்கத் தவறும் கோயில் அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












