
சாய்பாஸா: ஜனவரி 23 –
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர் அனல் டாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. சரணடைய மறுக்கும் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடப்படுகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் அனல் டா தனது கூட்டாளிகளுடன் இருப்பதாக போலீஸாருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட் வேட்டைக்காக உருவாக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவைச் சேர்ந்த 1,500 வீரர்கள் நேற்று காலை 6 மணிக்கு சரந்தா வனப்பகுதிக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்நிலையில் கும்டி என்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்ற போது பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஆயுதங்கள் பறிமுதல்: இதில் மாவோயிஸ்ட்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இறந்தவர்களில் ஒருவர் படிராம் மாஜி என்ற அனல் டா என்பது தெரியவந்துள்ளது. இவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர் கிரிதி மாவட்டத்தின் பிர்தந்த பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் உள்ளார். இவரை போலீஸார் பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதா பகத், சத்ரா, லதேகர், கும்லா, லோகர்தாகா, ராஞ்சி மற்றும் பரஸ்நாத் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை பாதுகாப்பு படையினர் முற்றிலும் ஒழித்துவிட்டனர். கோல்கன் மற்றும் சரந்தா வனப்பகுதி மட்டுமே தற்போது மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ளது. இந்நிலையில் சரந்தா வனப் பகுதியில் 15 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


















