
சென்னை, ஜூலை 10- அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு 2026-27-ம் ஆண்டுக்கான சப்-ஜூனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு, சப்-ஜூனியர் பெண்களுக்கான மாநில அணி வீராங்கனைகள் தேர்வு மற்றும் உண்டு உறைவிட பயிற்சி முகாம் தேர்வு வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் திண்டுக்கல்லில் உள்ள ரேடியன்ஸ் பப்ளிக் ஸ்கூல் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் காலை 7 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும். உண்டு உறைவிட பயிற்சி முகாம் வரும் 14-ம் தேதி முதல் ரேடியன்ஸ் பப்ளிக் ஸ்கூல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்த முகாமுக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு பயிற்சியாளர் மூலம் முறைப்படியான தகவல் தெரிவிக்கப்படும்.இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் 1.1.2013 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ மற்றும் 31.12.2014 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், ஆதார் ஆகியவற்றின் அசல் கொண்டுவர வேண்டும். மேலும் தேர்வுக்கான சோதனைகளில் பங்கேற்க வருவதற்கு முன்னதாக, வீராங்கனைகள் டிஜிலாக்கர் சரிபார்ப்பு செயல்முறையை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.





















