
சென்னை, ஜூலை 10- டிஎன்சிஏ சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் வரும் ஆகஸ்ட் 4 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை போட்டி 2 கட்டங்களாக கடத்தப்படுகிறது. முதல் கட்ட போட்டி ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல்லிலும், 2-வது கட்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. லீக் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 2-வது கட்ட போட்டியையொட்டி ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டம் 23-ம் தேதியும்,
எலிமினேட்டர் ஆட்டம் 24-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் 26-ம் தேதியும் நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28-ம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை 22 டபுள் ஹெட்டர்ஸ் (ஒரே நாளில் 2 ஆட்டங்கள்) நடைபெறுகின்றன. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 4-ல் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 2-வது கட்ட போட்டியில் சென்னையில் 18-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் – கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரை சோனி நெட்வோர்க் நேரலை செய்கிறது. மேலும் டிஎன்சிஏ-வின் யூடியூப் சானலிலும் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.





















