
பெங்களூரு: ஆக. 3-
பெங்களூரு சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே, பைக் டெலிவரி சேவையைப் பயன்படுத்தி சாக்லேட் பாக்கெட்டுகளில் கோகோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும், பேகூர் பிரதான சாலையில் வசித்து வருபவருமான ராஜு (30) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான கோகோயினை சாமராஜ்பேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பு அருகே அடிக்கடி டெலிவரி பைக்குகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து செல்வதை போலீசார் கவனித்தனர். போதைப்பொருள் கும்பல் குறித்த ரகசியத் தகவலின் பேரில் கண்காணித்தபோது, ஜூலை 19 நள்ளிரவில் கன்சர்வென்சி சாலையில் உள்ள குடியிருப்பு அருகே 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை லாஜிஸ்டிக்ஸ் பைக்குகள் வந்து சென்றது தெரியவந்தது.
டெலிவரி ஊழியர்கள் குடியிருப்புவாசிகளுக்கு பார்சல்களை வழங்குவதற்குப் பதிலாக, காரின் அருகில் நின்றிருந்த நபரிடமிருந்து சிறிய பாக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஒரு டெலிவரி ரைடரை மறித்து விசாரணை நடத்தியதில், அந்த பார்சல்களை ராஜு என்பவரே புக் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
காவல்துறையின் கூற்றுப்படி, வழக்கமான டெலிவரி கட்டணம் ரூ.50 மட்டுமே என்றாலும், பார்சல்கள் அதிவேகமாகவும் எந்தவித தாமதமும் இன்றியும் சென்று சேர வேண்டும் என்பதற்காக ராஜு ஒவ்வொரு டெலிவரி ரைடருக்கும் ரூ.300 வரை டிப்ஸ் கொடுத்துள்ளார்.
அந்த பார்சலைச் சோதனையிட்டபோது, சிறிய சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் கோகோயின் மறைத்து வைத்து கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜுவை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அக்சித் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 116.3 கிராம் கோகோயின் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை சாமராஜ்பேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கு விநியோகிக்கப்பட்டது, எத்தனை நாட்களாக இந்த சட்டவிரோத தொழில் நடந்து வருகிறது மற்றும் இதன் பின்னணியில் சர்வதேச அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பல் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













