
டெல்லி, ஜூலை 2- தமிழக ஆளுநர் அர்லேகர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது எனவும், சில மாநிலங்களில் ஆளுநர்களும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரளாவில் ஆளுநராக பதவி வகித்து வந்த அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வரும் அர்லேகர் நேற்று இரவு டெல்லியில் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசபப்ட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.


















