
சென்னை: மே 2 –
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும். வாக்கு எண்ணிக்கை நாளான நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியிருப்பதாவது:சுமார் 1.5 கிமீ உயரம்வரை, தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், திருப்பூர் மலை பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.


















