
சென்னை: செப்.10-
தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. மதிமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதி நடைபெற்றது. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், 2-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., எம்எல்ஏ தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஷாஜகான், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சிடிஆர். நிர்மல் குமார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் சூட்டப்பட்டது. கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (இன்று) அறிவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோம். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேர்மையான ஆட்சி அமைந்துள்ளது” என்றார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், “இந்தக் கூட்டணியின் பெயரிலேயே மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவை அடங்கி உள்ளன. தவெக எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உடன்பட்டு செயல்படுவோம்” என்றார். விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ஆதரவாக இருந்த கட்சிகள் இணைந்து கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தோடு இந்தக் கூட்டணி செயல்படும்” என்றார். ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், “தமிழகத்தில் புதிய வரலாற்றை தவெக படைத்துள்ளது. வருங்காலத்தில் உலகம் பாராட்டும் அளவுக்கு இந்தக் கூட்டணி இருக்கும்” என்றார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், “தேர்தலுக்கான கூட்டணியாக மட்டும் இல்லாமல், கொள்கை ரீதியான கூட்டணியாகச் செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைப் பெயரும் கூட்டணியில் உள்ளது” என்றார்.













