Home மாவட்டங்கள் பெங்களூர் தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை

தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை

பெங்களூரு: ஜூலை 11-
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமாக்ஷிபால்யா அருகே, பெற்ற தாய், பாட்டி மற்றும் அக்கா கணவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, கொலையாளி வாலிபரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) யதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு காமாக்ஷிபால்யா கொட்டிகேபால்யாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மங்களம்மா (வயது 55), அவரது தாய் நஞ்சம்மா (65), மங்களம்மாவின் மருமகன் சதீஷ் (50) ஆகியோர் வசித்து வந்தனர். மங்களம்மாவின் மகன் பிரசாந்த் (34). கார் டிரைவரான இவருக்கு கடந்த ஓராண்டாக வேலை இல்லை. மேலும், இவர் மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று காலை பிரசாந்தின் தந்தை சிக்கண்ணா வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டில் மற்ற 3 பேரும் இருந்தனர். அப்போது திடீரென பிரசாந்த், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தாய் மங்களம்மா, பாட்டி நஞ்சம்மா ஆகியோரை வாசலிலேயே சரமாரியாக வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கா கணவர் சதீஷையும் அறையினுள் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டு உரிமையாளரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். தப்பியோட முயன்ற பிரசாந்தைப் பிடித்து, உடனடியாக ஒரு அறைக்குள் தள்ளி உள்பக்கமாக பூட்டினர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து காமாக்ஷிபால்யா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், போலீசார் கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள், பொதுமக்கள் பூட்டிய அறையிலேயே பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஒரே வீட்டில் 4 பேர் பிணமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொலையுண்ட மங்களம்மாவின் கணவர் சிக்கண்ணா கூறுகையில், “மகன் பிரசாந்த் அடிக்கடி தாயுடன் சிறிய அளவில் சண்டையிடுவான். ஆனால் நேற்று இரவு எந்த சண்டையும் நடக்கவில்லை. நான் காலையில் இஸ்திரி கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். நான் மட்டும் வீட்டில் இருந்திருந்தால் என்னையும் தீர்த்துக்கட்டியிருப்பான் போலிருக்கிறது. அவனுக்கு புத்தி சுவாதீனம் நன்றாகத்தான் இருந்தது. ஏன் இப்படிச் செய்தான் என்று தெரியவில்லை” என கண்ணீருடன் தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த முப்பாதகக் கொலை நடந்ததா? அல்லது மனநல பாதிப்பு காரணமா? என்பது குறித்து காமாக்ஷிபால்யா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.