Home செய்திகள் தேசிய செய்திகள் தியா மிர்சா விழிப்புணர்வு வீடியோவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு

தியா மிர்சா விழிப்புணர்வு வீடியோவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு

மும்பை, நவ. 3-
மும்பையில் காற்று மாசு அதிகரித்து வருவதையடுத்து, பட்டாசுகளைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், மும்பை மாநகராட்சி சார்பில் ‘மாசு இல்லாத தீபாவளி’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்துக்காக நடிகைகள் தியா மிர்சா, மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட், கிரிக்கெட் வீரர் அஜிங்கே ரஹானே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த விழிப்புணர்வு வீடியோக்கள் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டன. இதில் தியா மிர்சா, தீபாவளியை மக்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என்றும், மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.தியா மிர்சாவின் இந்தக் கருத்துக்கு மும்பை பா.ஜனதா தலைவர் அமித் சதம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “தீபாவளியை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று தியா மிர்சாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களது பாரம்பரியங்கள் கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றியவை” என்று பதிவிட்டு, மும்பை மாநகராட்சியையும் விமர்சித்தார். இதையடுத்து, மாநகராட்சியின் எக்ஸ் பக்கத்தில் இருந்து தியா மிர்சாவின் வீடியோ சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது. மாதுரி தீட்சித், அஜிங்கே ரஹானே ஆகியோரின் வீடியோக்கள் நீக்கப்படவில்லை. இதுகுறித்து மேயர் ரிது தாவ்டே கூறுகையில், தியா மிர்சா பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாகவும் குற்றம்சாட்டினார். இந்துக்களுக்கு எதிரானவர் என்பதால் அவரது வீடியோ தடை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.