
தூத்துக்குடி: ஜூலை 28 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றது தொடர்பாக இரண்டு திரிசுதந்திரர்கள் மீது கோயில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24-ம் தேதி ஆடி அமாவாசையன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைப் பயன்படுத்தி திரிசுதந்திரர் பாபு நாராயணன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு, 60 வயது பூர்த்தியடையாத 5 நபர்களை முதியோர் முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளார்.
இதனால் மற்ற பக்தர்களும் அவ்வழியாக நுழைய முற்பட்டதால் மூத்த குடிமக்கள் முறை வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய அசவுகரியம் ஏற்பட்டது.
பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு, கோயில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய திரிசுதந்திரர் பாபு நாராயணன் மறு உத்தரவு வரும் வரை கோயிலில் எவ்வித பூஜை கைங்கரியங்களும் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2 ஆயிரம் இருந்தால் 10 நிமிடத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியானது.இதனடிப்படையில், திரிசுதந்திரர் பாலசுப்பிரமணியம் என்பவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லாததாலும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலில் அவர் ஈடுபட்டதாலும், மறு உத்தரவு வரை அவர் பூஜை கைங்கர்யம் செய்ய தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.