
திருமலை, ஜன. 23-திருமலையில் ரத சப்தமி விழா 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பிஆர் நாயுடு பேசியதாவது: பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து மிகப்பெரிய விழாவான ரதசப்தமி திருவிழாவை வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இடையே மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால் 25-ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வ தரிசன டோக்கன் விநியோகமும் 24, 25, 26-ம் தேதிகளுக்கு ரத்து செய்யப்படுகிறது. ரதசப்தமிக்கு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு 14 வகை உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன. மாட வீதிகளில் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், பால் போன்றவை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,700 ஸ்ரீ வாரி சேவகர்கள் தன்னார்வ தொண்டு ஆற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



















