
புதுடெல்லி: அக். 9-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் பல்வேறு ஐகோர்ட்டுகளின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 42 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், பா.ஜனதாவுக்கு சாதகமாக தன்னிச்சையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓய்வுபெற்ற 42 நீதிபதிகள் இந்திய மக்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, பங்கஜ் மிட்டல் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள குறிப்பிடத்தக்கவர்களில் அடங்குவர். அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்ட அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், அமைதி காப்பது இனிமேலும் நடுநிலையாக இருக்காது என்ற நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்தத் தாக்குதல்களின் மையப்புள்ளியாக தேர்தல் கமிஷன் உள்ளது. மிகவும் உயரிய இடத்தில் வைக்கப்படும் நீதித்துறையும் விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை. இந்தத் தாக்குதல்கள் நியாயமான விமர்சனங்கள் அல்ல என்றும், அரசியல் நலன்களால் உந்தப்பட்ட திட்டமிட்ட பிரசாரமாகத் தோன்றுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் தேர்தல் கமிஷன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் சட்டம் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் அளிக்கிறது. முதலாவது பொதுத்தேர்தல் முதல் இந்தத் திருத்தம் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டு வந்துள்ளது. கடைசியாக 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதை யாரும் சதி எனக் கூறவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்தப்படுவதாகவும், வெற்றி பெறும்போது அவ்வாறு கூறப்படுவதில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆதாரங்கள் அரிதாகவே அளிக்கப்படுகின்றன என்றும், தீர்ப்புகள் சாதகமாக இல்லாதபோது நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.













