
சென்னை, அக். 1-
நகர்ப்புறக் கழிவுகளை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ‘க்ளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட்’ (CTCL) மற்றும் தூய்மை இயக்கம் செயல்பட்டு வந்தன. நிர்வாக வசதிக்காக இவ்விரண்டையும் ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து நகர்ப்புறக் கழிவுகள் கிராமப்புறங்களில் கொட்டப்படும் அபாயம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களில் கொட்ட திட்டமா?’ என்ற தலைப்பில் கடந்த செப். 25-ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக துறை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: நகர்ப்புறக் கழிவுகளை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வது CTCL நிறுவனத்தின் நோக்கம் அல்ல. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் CTCL தொழில்நுட்ப ஆதரவு வழங்கும்.














