
புதுடெல்லி: மே 28-
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது , தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் முதல் முறையாக டெல்லிக்கு நேற்று சென்றார். சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் காலை 10 மணிக்கு புறப்பட்டு டெல்லிசென்றார். அதன்பின், தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வரை தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு காவல் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமரின் புதிய அலுவலகத்துக்குக் காரில் சென்றார். அங்கு முதல்வர் விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பிரதமர் தனது நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையை வழங்க வேண்டும். தமிழகத்தில் வான்வழி அமைப்புமையம் (சிஏபிஎஸ்) அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.


















