
பெங்களூரு: மே 28-
வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் நைஸ் சாலையின் மாதாவரா அருகே நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.
எலகங்காவைச் சேர்ந்த தினேஷ் (37) என்பவரே விபத்தில் பலியானவர் ஆவார். இவர் மாகடியில் தனது வேலையை முடித்துவிட்டு, இரவு 11 மணியளவில் பைக்கில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நைஸ் சாலையின் மாதாவரா அருகே வந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் வேகம் தாங்காமல் கீழே விழுந்த தினேஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சிக்கபாணவாரா போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல் தொட்டபெளவங்கலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்றொரு விபத்து நடந்துள்ளது. அங்கு அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
விபத்தில் இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விபரங்களை அறிய தொட்டபெளவங்கலா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















