
பெங்களூரு: ஜூன் 10-
பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்கலா தாலுகாவில் மீண்டும் சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
நெலமங்கலா தாலுகாவுக்கு உட்பட்ட கெங்கல் கிராமத்தில், நள்ளிரவில் மறைந்திருந்து தாக்கும் இந்த சிறுத்தை, வளர்ப்புப் பிராணிகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள சோம்புரா ஹோப்ளி, கெங்கல் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்த பிரசாத் என்பவரது தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. பகல்-இரவு என்று பார்க்காமல், எந்த நேரமும் இந்த சிறுத்தை தோட்டத்தில் சர்வசாதாரணமாக உலா வருவதால் ஒட்டுமொத்த கிராமமே மரண பயத்தில் ஆழ்ந்துள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















