Home தலைப்பு செய்தி நேரு சாதனை முறியடித்த மோடி

நேரு சாதனை முறியடித்த மோடி

புதுடெல்லி: ஜூன் 9-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் நீண்டகால பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு சாதனையை இன்று பிரதமர் மோடி சமன் செய்கிறார். நாளை முறியடிக்கிறார். தான் பிரதமராக பதவி வகித்து வரும்
இந்த காலகட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டு காலத்தில் ஏழைகளின் நலன் மற்றும் ‘அன்தியோதயா’ (கடைக்கோடி மனிதனுக்கும் பலன் கிடைத்தல்) என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. வளர்ச்சியானது சமுதாயத்தின் கடைசி மனிதனையும் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். ஜன்தன் யோஜனா, நேரடி மானிய பரிமாற்றம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி:
2014-ல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தையே பெரிதும் நம்பியிருந்தது. டிஜிட்டல் இந்தியா, ஆதார் சார்ந்த நேரடி மானிய பரிமாற்ற முறைகள் மற்றும் வங்கிச் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம், அரசின் சலுகைகளும் மானியங்களும் குடிமக்களை நேரடியாகச் சென்றடைகின்றன. இதன் மூலம் முறைகேடுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றிய என்.டி.ஏ கூட்டணி, அரசியல் ஸ்திரத்தன்மையையும் தொடர்ச்சியையும் பலப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சவால்கள் இருந்தபோதிலும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி, இந்தியா ஒரு வலுவான பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கட்டமைப்பு மாற்றங்களாக ஜி.எஸ்.டி அமலாக்கம், வரி நடைமுறைகளை எளிதாக்குதல், டிஜிட்டல் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் முதலீடு – தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ போன்ற உற்பத்தி சார்ந்த முயற்சிகள் ஏழை எளிய மக்களுக்குப் பெரிதும் பயனளித்துள்ளன.
மக்கள் நலத்துறையில் உஜ்வலா திட்டம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிஎம்-கிசான் போன்ற திட்டங்கள் சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார உள்ளடக்கத்திற்கு உதவியாக இருந்துள்ளன.
அதேபோல், ‘பெட்டி பச்சாவோ பெட்டி படாவோ’, ‘மிஷன் சக்தி’, ‘பிஎம்-மாத்ரு வந்தனா யோஜனா’ மற்றும் ‘நாரி சக்தி வந்தனா அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) உள்ளிட்ட பெண்கள் சார்ந்த திட்டங்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி அரசு எடுத்து வைத்துள்ள அடிவைப்பிற்கு சான்றாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முக்கிய அம்சங்கள் : நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 12 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

  • 12 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அமல்
  • பலதரப்பட்ட திட்டங்கள் மூலம் மக்களின் நலனுக்கு முதலிடம்.
  • ஏழை மக்களுக்கு நேரடியாக பலன்கள் சென்றடையப் பல்வேறு நடவடிக்கைகள்.
  • நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமைக்கும் பாத்திரமானார்.
  • எண்ணற்ற பல நலத்திட்டப் பணிகளுக்கு வெற்றிகரமாகச் செயல்வடிவம்.