Home மாவட்டங்கள் சென்னை பருவ மழை பெய்தும் நிரம்பாத அணைகள்

பருவ மழை பெய்தும் நிரம்பாத அணைகள்

சென்னை, நவ. 3-
தமிழகத்தில் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையிலும், பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது வடமாவட்டங்களிலும் மழை பரவலாகப் பெய்யத் தொடங்கியுள்ளது. எனினும், மாநிலத்தில் உள்ள 90 அணைகளில் 75.7 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 33.7 சதவீதமாகும்.
மொத்தம் மூன்று அணைகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. 43 அணைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான நீரே உள்ளது. அவற்றில் 24 அணைகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயிலே, அதிக மழை பெய்தும் அணைகள் நிரம்பாததற்குக் காரணம் என நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அணைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை குறைந்தது. இதனால் பல அணைகளில் நீர் இருப்பு குறைந்து, தரைப்பகுதி வெளிப்படத் தொடங்கியது. கடும் வெயிலால் வண்டல் மண் தரையில் பிளவுகள் ஏற்பட்டன. தற்போது பெய்து வரும் மழைநீர், அணைகளின் வறண்ட பகுதிகளால் வேகமாக உறிஞ்சப்படுகிறது.