Home செய்திகள் தேசிய செய்திகள் பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது

பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது

புதுடெல்லி, ஜூலை.21-
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்தியபோது, தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார் அவர்களை கலைத்தனர். போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் இல்லம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி இன்று நாங்கள் அவரது இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றோம். இந்த விவகாரத்தில் பொறுப்பேற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதிவி விலக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய 20 நிமிடங்களில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், போராட்டக் களத்துக்கு வந்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு ராகுல் காந்தி மறுத்ததை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராகுல் காந்தியை சந்தித்துப் பேச அரசாங்கம் என்னை அனுப்பியது. நான் ராகுல் காந்தியிடம் பேசியபோது, நீட் மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால் உடனடியாக தனது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
சில நிமிடங்களில் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைமையின் அனுமதியைப் பெற்ற பிறகு, ராகுல் காந்தியின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும், நீட் மற்றும் தொடர்புடைய இயக்கம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்ற தகவல் ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அவர் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒரு மூத்த தலைவர் தனது வார்த்தையிலிருந்து பின்வாங்குவது துரதிருஷ்டவசமானது. மேலும், விதிகளின்படி இந்த விஷயத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள காங்கிரஸ் இன்றுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. ராகுல் காந்தியின் நடத்தை ஜனநாயகக் கொள்கைளுக்கு பொருந்தவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனுமதி இன்றி பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.