
லக்னோ, மே 23- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றிகளை குவித்து மிரட்டியிருந்தது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக அந்த அணி இருக்கக்கூடும் என அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அடுத்த 6 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது பஞ்சாப் அணி. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 15 புள்ளிகளையே பெற முடியும். இது நிகழ்ந்தாலும் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளின் கடைசி ஆட்டங்களின் முடிவை பொறுத்தே பஞ்சாப் கிங்ஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரியவரும். இதில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளையும், கொல்கத்தா அணி 13 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பையுடனும், கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும் மோதுகின்றன. இந்த 2 ஆட்டங்களும் நாளை (24-ம் தேதி) நடைபெறுகின்றன. ராஜஸ்தானும், கொல்கத்தாவும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ராஜஸ்தான் அணி மும்பையை வீழ்த்தினால் பஞ்சாப், கொல்கத்தா ஆகிய 2 அணிகளுமே தொடரில் இருந்து வெளியேறும். ஒருவேளை ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதிலும் ஒரு சிக்கல் உருவாகக்கூடும். ராஜஸ்தான் அணி மும்பையிடம் தோல்வி அடைந்து பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டால் இந்த இரு அணிகளும் தலா 15 புள்ளிகளை எட்டும். அப்போது நிகர ரன் விகிதத்தை பொறுத்தே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்பது முடிவாகும். தற்போதைய சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிகர ரன் விகிதம் 0.227 ஆகவும், கொல்கத்தா அணியின் நிகர ரன் விகிதம் 0.011 ஆகவும் உள்ளது. ஆனால், இந்த கணிப்புகளும் கணக்குகளும் வருவதற்கு முன்பாக, பஞ்சாப் அணி முதலில் தங்களது சரிவிலிருந்து மீண்டு ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம். ஏனெனில், இந்தத் தொடர் சரிவு அந்த அணியின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பி கூப்பர் கானொலி கிடைத்த தொடக்கங்களை பெரிய ரன்களாக மாற்றத் தவறுகிறார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும் தோல்வி அடைந்த ஆறு ஆட்டங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே ஐம்பது ரன்களைக் கடக்க முடிந்தது. ரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானொலி ஆகியோரைக் கொண்ட அந்த அணியின் அதிரடியான டாப் ஆர்டர் இந்தத் தொடரின் முதல் பாதியில் கொடுத்த அதிரடியான தொடக்கங்களை தொடரின் பிற்பகுதியில் வழங்கத் தவறிவிட்டது. பிரியன்ஷ் ஆர்யா தனது கடைசி ஏழு இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதோடு முந்தைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில், பிரப்சிம்ரன் சிங் தனது கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.





















