Home தலைப்பு செய்தி லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூரு, நவ. 18-
கர்நாடக மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஹூப்பள்ளியில் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹூப்பள்ளியைச் சேர்ந்த புதிய கே.எஸ்.ஆர்.டி.சி. டிரைவர் மற்றும் கண்டக்டர் ஷடாக்‌ஷரய்யா என்பவரது வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதேபோல் ஹாசன், சித்ரதுர்கா மற்றும் பாகல்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இருவர் மீது சோதனை:
சித்ரதுர்கா மாவட்டத்தில், மாவட்ட அரசு மருத்துவமனையின் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவீந்திரா மற்றும் டை மற்றும் அளவைத் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோரது வீடுகளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பாகல்கோட்டையில் சோதனை:
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா பஞ்சாயத்தின் பஞ்சாயத்து ராஜ் பிரிவு உதவி இயக்குனர் சஞ்சு ஹிப்பரகி என்பவரது வீடுகளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜமகண்டி நகரின் மைகூர் சாலை மற்றும் விஜயநகர் லே-அவுட்டில் உள்ள அவரது இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஜமகண்டி தாலுகா மைகூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சு ஹிப்பரகி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.
பாகல்கோட்டை லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு மகாலிங்க் நந்தகாவி வழிகாட்டுதலின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ரெட்டி தலைமையில் சுமார் 7 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
ஹாசன் மாவட்டத்திலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். சகலேஷ்பூர் சரக வனத்துறை அதிகாரி ஹேமந்த் குமாருக்குச் சொந்தமான 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஹாசன் நகரின் சிக்கஹொன்னேனஹள்ளியில் உள்ள அவரது வீடு, சகலேஷ்பூரில் உள்ள வாடகை வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், ஆலூர் தாலுகா தொட்டமக்கே கிராமத்தில் உள்ள ஹேமந்த் குமாரின் மாமனார் வீடு மற்றும் குவெம்பு நகரில் உள்ள அவரது நெருங்கிய நண்பரும் ஒப்பந்ததாரருமான ஹரீஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
நிதி ஆவணங்கள் ஆய்வு:
லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு நந்தினி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஷில்பா, கவிராஜு, சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளின் போது, சொத்து ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு, கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.