
புதுடில்லி, ஆக. 17- சமூக வலைதளங்களில் மத்திய அரசின் துறைகள் தொடர்பாக பரப்பப்படும் போலியான மற்றும் திரித்து வெளியிடப்படும் தகவல்களுக்கு உடனடியாக பதில் அளிக்கும் வகையில், ஒவ்வொரு அரசு துறையும் தனித்தனியாக ‘கியூ.ஆர்.டி.,’ எனப்படும் விரைந்து பதிலளிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அரசு தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக வேகமாக பரவி வருகின்றன. இதில் அரசு கொள்கைகள், திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து, தவறான அல்லது பொய்யான தகவல்கள் பரவும்போது, அவற்றுக்கு தாமதமின்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே பி.ஐ.பி., எனப்படும் செய்தி தொடர்பு அமைப்பில் உண்மை கண்டறியும் குழு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் பெயரிலும் சமூக வலைதளங்களில் பக்கங்கள் துவங்கப்பட்டு, அவற்றின் வாயிலாக மக்களுக்கு தகவல் அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு தேவையான தகவல் மற்றும் ஒருங்கிணைப்பை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு வழங்கி வருகிறது. ஆனால், பொய்யான அல்லது போலி தகவல்கள் வெளியிடப்படுவதை கண்காணித்து உடனடியாக அதற்கு பதிலளிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக துறை வாரியாக, கியூ.ஆர்.டி., என்ற பெயரில், சமூக வலைதள செய்திகளுக்கு பதிலளிக்க குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த குழு பொதுவான அமைப்புக்கு மாற்றாக அமைக்கப்படாது. மாறாக, சம்பந்தப்பட்ட துறையின் விஷயங்களை உடனடியாக சரிபார்த்து உண்மை நிலையை தயாரிப்பதற்கான கூடுதல் ஏற்பாடாக இவை செயல்பட உள்ளன. அவசியம் ஒரு துறை தொடர்பான தவறான தகவல் சமூக வலைதளத்தில் வேகமாக பரவும்போது, அது குறித்து பொதுவான உண்மை கண்டறியும் அமைப்புகள் மூலம் தகவல் சேகரித்து பதில் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதற்குள் போலி தகவலை உண்மை என நம்பி பலரும் ‘வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்ப துவங்கி விடுகின்றனர். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு அமைச்சகம் அல்லது துறையின் பணிகள், திட்டங்கள், கொள்கைகள் குறித்து நேரடியாக அறிந்த அதிகாரிகள் அடங்கிய கியூ.ஆர்.டி., எனப்படும் விரைவு பதில் குழுவை அமைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது.













