
புதுடெல்லி, அக். 9-
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு, சம்பந்தப்பட்ட வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், சமூக வலைதளங்களில் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலியான டீப்பேக் வீடியோக்களும், உண்மைக்கு மாறாக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்ட பதிவுகளும் அதிகளவில் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தற்போது நிகழ்ந்த சம்பவங்களைப் போல சித்தரித்து வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற பதிவுகள் உண்மையான தகவல்கள்போல் பொதுமக்களிடம் பரவுவதால், அவற்றை வேறுபடுத்திக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தவறான தகவல்களின் பரவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய பதிவுகள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுத்து, பொது அமைதியைச் சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, சமூக வலைதள நிறுவனங்கள் போலியான வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளைக் கண்டறிவதில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு அடையாளம் காணப்படும் பதிவுகளை காலதாமதமின்றி உடனடியாக நீக்குவதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.














