
குவாஹாட்டி: ஜூன் 10-
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோக்களை மணிப்பூரில் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரின் மலைப் பகுதி மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்காங்கே நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மணிப்பூருக்குச் சென்ற சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜி.பி.சிங், இந்த கமாண்டோக்களை பணியில் ஈடுபடுத்து வதற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.பி.சிங் தனது பயணத்தில் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார்.இதுகுறித்து சிஆர்பிஎப் இயக்குநர் ஜி.பி.சிங் கூறுகையில், “எந்தவொரு உயர்நிலை கமாண்டோ பிரிவுக்கும் தங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் மிக அவசியமான பண்பாகும். கோப்ரா வீரர்களுக்கு பணிக்கு முந்தைய பயிற்சியுடன் மணிப்பூரின் சூழலைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் அவர்கள் மணிப்பூரில் தங்கியிருக்கும் போது தங்களது திறன்களை இன்னும் கூர்மைப்படுத்திக் கொள்வார்கள்” என்றார்.


















