Home மாவட்டங்கள் பெங்களூர் மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை

மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை

கொப்பளம்: ஜூலை 13-
கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முனிராபாத் ஐ.ஆர்.பி பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் சரணப்பா உப்பார் (வயது 49). மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவரை, அவரது குடும்பத்தினர் குஷ்டகியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரணப்பா தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். “என்னை இந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று அவர் கெஞ்சியுள்ளார். ஆனால், அவரது மனைவியோ, “இன்னும் சில நாட்கள் அங்கேயே இருந்து சிகிச்சை பெற்று வாருங்கள்” என்று கூறி அழைத்துச் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு சரணப்பா, மறுவாழ்வு மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குஷ்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.