
சென்னை:செப். 13- தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு கோடைக்காலம் எதிர்பாராதவாறு நீடித்ததால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்த குறைபாடு போன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதை கருத்தில் கொண்டே கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் முயற்சியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் மின்சாரத்துடன் வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தமாக 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்போது மின் தொகுப்பின் நிலைமை சீரடைந்து காணப்படுகிறது.
வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது திட்டமிடப்படும் மின்தடைகளையும் இயன்றவரை தவிர்க்க வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. நாள்முழுவதும் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைப்பதையும் உறுதி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டும் என்பதில் மின்வாரியம் கவனம் செலுத்துகிறது. அதற்காக தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.














