
சென்னை: மே 5-
தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து திராவிட முன்னேற்ற கழகம் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 47 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பெறாத காரணத்தினால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை தற்போது ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்தில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் தற்போது சென்னையில் இல்லாத காரணத்தால் ராஜினாமா கடிதம், ஆளுநர் மாளிகையில் உள்ள ஆளுநரின் செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆளுநர் சென்னை வந்த பிறகு ராஜினாமா கடிதத்தை அவர் ஏற்றுக்கொண்டு புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என கேட்டுக்கொள்வார். அதன்படி புதிய அமைச்சரவை அமையும்வரை மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார்.


















