Home மாவட்டங்கள் சென்னை முதல்வர் விஜய் உடன் ராகுல் காந்தி சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ராகுல் காந்தி சந்திப்பு

சென்னை: அக். 10-
10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். அவர், முதல்-அமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசுகிறார்.
இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி, ராகுல்காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மராட்டிய மாநிலத்தின் புனே, நாசிக் மற்றும் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் ராகுல்காந்தி பேசுகிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தீவுத்திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். அவருடன் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், இணைப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் இருந்தனர். மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, மதியம் 1.30 மணிக்கு முதல்-அமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். பின்னர், மாலை 5 மணியளவில் தீவுத்திடலில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழ்நாடு முழுவதும் இணையதளம் மற்றும் கியூ.ஆர். கோடு மூலம் நடத்தப்பட்ட பதிவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பந்தலுக்கு வெளியே உள்ளவர்கள் நிகழ்ச்சியை காண அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், முன்னாள் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 350 முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 9.30 மணியளவில் ராகுல்காந்தி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.