
சென்னை, நவ. 3-
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் சென்னை முழுவதும் உள்ள 19 மண்டலங்களில் விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக 1,346 நியாயவிலைக் கடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கடை விற்பனையாளர்கள் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவார்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட சேவைகளையும் பொதுமக்கள் தொடர்ந்து பெறலாம். மேலும், ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளைத் தீர்க்கவும், அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட வழக்கமான பொருட்களும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.இதற்கிடையே, தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.













