
சென்னை: மே 28-
தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.
பயிர்க் கடன் தள்ளுபடி என்பது திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் ஓட்டுக்காக விவசாயிகளை வளைக்கும் ஒரு உத்தி. அதேசமயம், இந்த ‘தள்ளுபடி’ விவகாரத்துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.
இதில்லாமல், சுமார் 900 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்கங்களும் 24 மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரைக்கும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
வாஜ்பாய் ஆட்சியில் கடன் சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்தன. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் வைத்தியநாதன் கமிட்டி அளித்த சிபாரிசின் படி சுமார் 13 ஆயிரம் கோடியை வங்கி மறுசீரமைப்பு நிதியாக மத்திய அரசு அளித்தது. (இதில் சுமார் 1,000 கோடி தமிழகத்துக்கான நிதி). ஆனால், இந்த நிதியை பெறவேண்டுமானால் மாநில அரசுகள் நபார்டு வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
வங்கி நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட விஷயங்களுக்கு செக் வைத்ததால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் செக் ஷன் 35 (ஏ)-ன் படி சிவகங்கை மத்தியக் கூட்டுறவு வங்கியை முடக்கியது ரிசர்வ் பேங்க். இது தனது தொகுதிப் பிரச்சினை என்றாலும், “இது ரிசர்வ் பேங்க் எடுத்த நடவடிக்கை” என்று சொல்லி ஒதுங்கினார் சிதம்பரம். இதையடுத்து, “ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்தினால் வங்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்” என்றது நபார்டு. ஆனால் ஜெயலலிதா, ரூ.13 கோடியை மட்டும் செலுத்த சம்மதித்தார்.


















