
புதுடெல்லி: ஏப்ரல் 23-
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் சுமார் 30 சதவீதம்.
இந்தச் சூழலில், முஸ்லிம் வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), பாஜக.வுக்கான வாக்கு சதவீத இடைவெளி சுமார் 8 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில், டிஎம்சியின் முக்கிய முஸ்லிம் ஆதரவு சுமார் 3 சதவீதம் சரிந்து, அதனுடன் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையும் இணைந்தால் டிஎம்சி-க்குக் கடும் போட்டி ஏற்படும். கடந்த 2021-ல், 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் டிஎம்சி 37 தொகுதிகளில் வென்றது.
இதனால், முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 20,000 வரை குறைந்தால், அந்த தொகுதியில் டிஎம்சியின் வெற்றியை நேரடியாகப் பாதிக்கும். உதாரணமாக, நாடியா மாவட்டத்தின் கரீம்பூர் தொகுதியில் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசமும், முர்ஷிதாபாத் மாவட்ட தம்கல் தொகுதியில் சுமார் 47,000 வாக்குகள் வித்தியாசமும் இருந்தது. 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வேறு பல தொகுதிகளிலும் டிஎம்சி வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 40,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் ஏராளமானோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வெற்றியைத் தீர்மானிக்கும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள முர்ஷிதாபாத், மால்டா மற்றும் வடக்கு தினாஜ்பூரில் தேர்தல் களம் வேறு மாதிரியாக உள்ளது.இங்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் செல்வாக்கு வலுவாக உள்ளது. ‘முஸ்லிம்களுக்கு பாஜக மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை மம்தாவால் மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியும்’ என்ற கருத்தும் உள்ளது. ஆனால், டிஎம்சி. யில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கியுள்ள ஹுமாயூன் கபீர், அரசியலில் முஸ்லிம்களுக்கு அதிகாரப் பங்கீடு தேவை என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார். இதனால் முஸ்லிம்கள் மாற்று வழியையும் சிந்திக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் ஹைதராபாத் எம்.பி.அசதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் உள்ளது. இவர் போன்ற தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தை வலுப்படுத்துவது ஒருபுறம் இருக்க, அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கும் பர்ஹத் ஹக்கீம், சித்திகுல்லா சவுத்ரி ஆகிய இருவருக்கும் கூட எந்த அதிகாரமும் டிஎம்சி ஆட்சியில் இல்லை எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.இதுபோன்ற காரணங்களால் 2026 தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் மனநிலை மாறியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் போது மம்தாவுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறுகின்றனர்.


















