
புதுடெல்லி: மே 7-
மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்சாலா, நியூ சண்டிகரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதுதான் மரபு.
ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் இறுதிப்போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டை தவிர 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது.
பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில், “முதலில் பெங்களூருவில் இறுதிப்போட்டியை நடத்தவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பிசிசிஐ-யின் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளிடமிருந்து சில கோரிக்கைகள் வந்தன. இதன் காரணமாக, இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.எனினும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்ட கோரிக்கைகள் என்ன என்பதை பிசிசிஐ விரிவாக விளக்கவில்லை. அதே வேளையில் இந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் தகுதி சுற்று-1 போட்டி, மே 26-ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். தரம்சாலாவில் ஐபிஎல் பிளே ஆஃப் ஆட்டம் நடைபெற உள்ளது
இதுவே முதன்முறையாகும். புள்ளிகள் பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும். இந்த போட்டி மே 27-ம் தேதி நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே மைதானத்தில் மே 29-ம் தேதி தகுதி சுற்று-2 போட்டியும் நடைபெறும். இந்த ஆட்டத்தில் தகுதி சுற்று-1-ல் தோல்வி அடைந்த அணியும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி அடைந்த அணியும் பலப்பரீட்சை நடத்தும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.அகமதாபாத் மைதானத்தில் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வசதி உள்ளது. இதன் காரணமாகவே ஐபிஎல் இறுதிப் போட்டியை இங்கு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.





















