
மாட்ரிட், ஆக. 1- ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியாகும். முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணமாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் அத்துமீறி ஸ்பெயினுக்குள் நுழைந்து வருகின்றனர். ஆனால், மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்பெயின் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர். போலீஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் கடல்வழியாக நுழைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், போலீஸாரையும் அதிக அளவில் குவித்திருந்தது. ஸ்பெயின் எல்லைக்குள் வரும் மொராக்கோ மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீஸார் விரட்ட முயன்றனர். இருந்தபோதும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சியூட்டா எல்லையைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்றுவிட்டதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்கியது போன்ற காரணங்களால் மொராக்கோவைச் சேர்ந்த 41 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிரகண்காணிப்பை ஏற்படுத்திஉள்ளது. எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சியூட்டா பகுதியை நோக்கி வரும் மக்களைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொராக்கோவில் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவையே இதற்கான முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. அந்நாட்டில் இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலிலும், நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலையிலும் விரக்தியடையும் இளைஞர்கள், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைத் தேடி ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கத் துணிகின்றனர்.















