Home மாவட்டங்கள் சென்னை மோடி வருகை: சென்னையில் 15,000 போலீஸார்

மோடி வருகை: சென்னையில் 15,000 போலீஸார்

சென்னை: அக். 10-
பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 11) சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி–வடபழனி இடையிலான 14.64 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, முதல்வர் விஜய்யுடன் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.
சென்னை ஐஐடியில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிறுவனர்களைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடுகிறார். பின்னர், ‘இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைக்கிறார். பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட பழனி, பரமக்குடி, நாமக்கல், அம்பாசமுத்திரம், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையங்கள், கோவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலங்கள், காரைக்கால்–பேரளம் இடையே அமைக்கப்பட்டுள்ள 23 கி.மீ. புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மேலும், விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரையிலும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பிரதமர் ‘ரோடு ஷோ’ செல்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அக். 11-ம் தேதி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழிக் கருவிகள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பகுதிகள் அனைத்தும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்கியிருப்போர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகளில் தீவிர வாகனச் சோதனையும் நடைபெறுகிறது.