
கீவ், மே 4- ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெலிகிராம் சமூக வலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் எரிபொருள் நெட்வொர்க்கை சிதைக்க உக்ரைன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவின் நிழலாக செயல்பட்டு வந்த 2 எண்ணெய் கப்பல்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்தோம். அந்தக் கப்பல்கள்தான் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கொண்டு சென்று வந்தன. இப்போது அந்த கப்பல்கள் இல்லை. அந்த 2 கப்பல்களையும் ரஷ்யாவின் நோவோராசியிக் துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியில் தாக்கி அழிக்கப்பட்டது. தரை, வான், கடல் வழியாக தொலைதூர இலக்கை தாக்கும் உக்ரைனின் ராணுவ நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





















