
டில்லி, நவ. 18-
டில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான சுப்ரீம்கோர்ட்டு அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, “ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் அது சிக்கல்களை உருவாக்கும்” என்று அமர்வு கருத்து தெரிவித்தது. போராட்டங்களை செய்தியாக சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் பணிக்கு தடையிருக்கக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவோர் மற்றும் சமூக வலைதள பிரபலங்களுக்கும் பொருந்துமா என்பது தொடர்பாக டில்லி போலீசார் சுப்ரீம்கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில், ரீல்ஸ் வீடியோ வெளியிடுவோரை ஊடகத்தினருடன் ஒப்பிட முடியாது என்றும், பதற்றமான போராட்டக் களத்தில் அவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அதேபோன்ற சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டங்களில் பங்கேற்ற பலர், ஒரே நேரத்தில் ரீல்ஸ் வெளியிடுவோராகவும் செயல்பட்டதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதனால், அவர்களை மற்ற போராட்டக்காரர்களிடம் இருந்து வேறுபடுத்துவது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். அதேவேளையில், உண்மையான பத்திரிகையாளர்கள் தங்களது பணிகளைத் தொடர சுதந்திரம் வழங்கப்பட்டதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













