Home செய்திகள் தேசிய செய்திகள் உலகத் தலைவர்களுக்கு இந்தியக் கலைப்பொருட்கள்: மோடி பரிசு

உலகத் தலைவர்களுக்கு இந்தியக் கலைப்பொருட்கள்: மோடி பரிசு

மணிலா: நவ. 18-
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 23-வது இந்தியா–ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய முன்மொழிவுகளை எடுத்துரைத்தார். இதனுடன், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் மாநாடும் நடைபெற்றது.
குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தார்.
மணிலாவுக்கு வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு, ராஜஸ்தானின் பாரம்பரிய ஜெய்ப்பூர் நீல மண்பாண்டக் கலைப்பொருளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பளபளப்பான வெள்ளை மேற்பரப்பில், மலர் வடிவங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவை நுணுக்கமாகக் கையால் வரையப்பட்டுள்ளன. பிரகாசமான கோபால்ட் நீல நிற வண்ணங்களைக் கொண்டு அந்தக் கலைப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, ராஜஸ்தானின் நத்வாராவில் உருவாக்கப்படும் பிரபலமான ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
பாரம்பரிய துணி ஓவியக் கலையைச் சேர்ந்த இந்தப் படைப்பில் தாமரைகள், பசுக்கள், மரங்கள் உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த கைவினைக் கைத்திறனை வெளிப்படுத்தும் இந்த ஓவியத்துக்கு தங்க நிறப் பூச்சு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
ஜப்பான் பிரதமர் சனா தகைச்சிக்கு, சதேலி பெட்டியில் வைக்கப்பட்ட ராயல் ப்ளூ பனாரசி பட்டுத் துணியை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்தியாவின் நட்பு, அரவணைப்பு மற்றும் கலாசாரத்தை குறிக்கும் இந்தப் பட்டுத் துணி, பனாரஸின் பல நூற்றாண்டுகள் பழமையான ஜவுளிக் கலையை வெளிப்படுத்துகிறது. தலைமுறை தலைமுறையாக நெசவாளர்களின் கைவண்ணமும் இதில் பிரதிபலிக்கிறது.பிலிப்பைன்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார்.