Home செய்திகள் உலக செய்திகள் டிரம்ப்பை கொல்ல சதி: பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டு சிறை

டிரம்ப்பை கொல்ல சதி: பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டு சிறை

வாஷிங்டன் நவ. 18-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட அரசு பதவிகளில் உள்ள முக்கிய நபர்களை படுகொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
48 வயதான ஆசிப் மெர்ச்சன்ட், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையினரின் தூண்டுதலின் பேரில் அவர் இந்தச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், அமெரிக்க மாவட்ட நீதிபதி எரிக் ஆர். கோமிதீ தண்டனை விவரங்களை அறிவித்தார். படுகொலைகளைச் செய்வதற்காக கூலிப்படையினரை பணியமர்த்த மெர்ச்சன்ட் முயற்சி செய்ததாகவும், இதற்காக அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்தத் தகவல்களை அமெரிக்க அரசு வழக்கறிஞர் டாட் பிளாஞ்ச் வெளியிட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மெர்ச்சன்ட், தாமாக முன்வந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையில் சேர்ந்ததுடன், அதன் உளவுப் பிரிவுக்கான பயிற்சியையும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் அமெரிக்காவுக்குச் சென்று, படுகொலைச் செயலுக்கான சரியான இடத்தைத் தேர்வு செய்யவும், தேவையான கூலிப்படையினரை பணியமர்த்தவும் முயன்றதாக கூறப்படுகிறது.இந்தத் திட்டத்தில் டிரம்ப் முக்கிய இலக்காகக் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன், முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே ஆகியோரும் இலக்குகளாகக் கருதப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான போட்டியில் இருந்தவர்கள்.
இதற்குப் பழிவாங்க ஈரான் விரும்பியதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.